ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழை முன்னிறுத்தி தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்
மத்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய
அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில்,
மின்னணு (டிஜிட்டல்) வாழ்நாள் சான்றிதழை முன்னிறுத்தி தேசிய அளவிலான
விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய் செல்போன் மூலம், முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓய்வூதியதாரர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும், மைல்கல் நடைமுறையை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய இணை அமைச்சர் திரு.ஜிதேந்திர சிங், தொடங்கிவைத்தார்.
தற்போது அத்துறை சார்பில், டிஜிட்டல் முறையில், முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதை மேலும் பிரபலப்படுத்தும் வகையில், தேசிய அளவிலான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஓய்வூதியதாரர் சங்கங்கள், ஓய்வூதியத்தை விடுவிக்கும் வங்கிகள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் நல மையங்கள் ஆகியவை, இதற்கான சிறப்பு முகாம்களை நடத்தி, ஓய்வூதியம் பெறும் நடைமுறையை ஓய்வூதியதாரர்களுக்கு எளிமையாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, ஓய்வூதியத் துறை அதிகாரிகள் திருமதி. டெபோரா உமேஷ், ஆன்ட்ரூ ஜூமாவிய கர்தக், திருமதி.தன்யா ராஜ்புத் ஆகியோர், புதுதில்லியில் உள்ள ஆர்.கே. புரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நவம்பர் 11ம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்கின்றனர். இதேபோல், நொய்டா 2வது செக்டாரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நவம்பர் 12ம் தேதி நடைபெறும், இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கிறார்கள்.
இதேபோல், மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் திரு. தீபக் குப்தா தலைமையிலான குழு, நவம்பர் 11ம் தேதி உத்தரபிரதேசத்தின் பிரயக்ராஜ் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொள்கிறார்கள். அனைத்து ஓய்வூதிதாரர்களும் இந்த முகாம்களுக்கு வருகை தந்து, டிஜிட்டல் முறையிலான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
முன்னதாக, ஓய்வூதியதாரர்கள் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்பிப்பதற்காக, வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றவே தற்போது டிஜிட்டல் முறை தொடங்கப்பட்டுள்ளது.